மம்தா பானர்ஜியின் அறிவிப்பு “இண்டி” கூட்டணிக்கு சாவுமணி. அரசியல் திருமணம் நடப்பதற்கு முன்பே ‘தலாக்’ நடந்து விட்டது. “இண்டி” கூட்டணி கீரியும், பாம்பும் அமைத்த இயற்கைக்கு மாறான கூட்டணி என்று பா.ஜ.க. தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக, எதிர்கட்சிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் “இண்டி” என்கிற பெயரில் கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியில் மாநிலத்திலுள்ள பிரதானக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
அந்த வகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
எனினும், இக்கூட்டணிக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதாகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
இதேபோலவே, பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் காங்கிரஸ் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழகத்திலோ சனாதனம் பற்றி தி.மு.க. விமர்சித்து காங்கிரஸ் கட்சிக்கு வேறு மாதிரியாக தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மேற்கவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மானும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
இதையடுத்து, மம்தா பானர்ஜி இண்டி கூட்டணிக்கு சாவுமணி அடித்து விட்டார் என்று பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், தனித்துப் போட்டி என்ற மம்தா பானர்ஜியின் அறிவிப்பு விரக்தியின் வெளிப்பாடாகும். தேர்தலுக்குப் பிறகு தனது பேச்சு எடுபட வேண்டும் என்பதற்காக அனைத்து தொகுதிகளிலும் அவர் போட்டியிட விரும்புகிறார். எதிர்கட்சி கூட்டணியின் முகமாக உருவெடுக்க வேண்டும் என்று கருதினார்.
ஆனால், யாருமே அவரது பெயரை முன்மொழியவில்லை. பலமுறை டெல்லி சென்றும் அது பலனளிக்கவில்லை. இதனால், தர்மசங்கடம் அடைந்த மம்தா, மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தான் போட்டியில் இல்லை என்பதை உணர்த்தினார்.
தற்போது, ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்க மாநிலத்துக்கு வரும் நிலையில், தனித்துப் போட்டி என்று மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது ‘இண்டி’ கூட்டணிக்கு சாவுமணியாக அமைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பா.ஜ.க. தேசியச் செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறுகையில், “எதிர்கட்சிகள் அமைத்தது ஒரு காகித கூட்டணி. அவர்களிடம் செயல்திட்டமோ, தலைமையோ இல்லை” என்று விமர்சித்திருக்கிறார்.
அதேபோல, பா.ஜ.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவல்லா கூறுகையில், “அரசியல் திருமணம் நடப்பதற்கு முன்பே ‘தலாக்’ நடந்து விட்டது. ஒருபக்கம் இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் ‘இண்டி’ கூட்டணி கட்டிடம் தினந்தோறும் இடிந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
பா.ஜ.க. இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறுகையில், “இண்டி கூட்டணி கீரியும் பாம்பும் அமைத்த இயற்கைக்கு மாறான கூட்டணி. ஒவ்வொரு கட்சியும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிட்டவை. ஆகவே, அக்கூட்டணி இயற்கை மரணத்தைத் தழுவப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.