இந்தியாவின் டாடா குழுமமும், பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உள்நாட்டு மற்றும் உள்ளூர்மயமாக்கல் கூறுகளுடன் பயணிகள் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முக்கிய முடிவுகள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது, இந்தியாவின் டாடா குழுமமும், பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உள்நாட்டு மற்றும் உள்ளூர்மயமாக்கல் கூறுகளுடன் பயணிகள் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.
மேலும், இந்தியாவும் பிரான்ஸும் பாதுகாப்பு தொழில்துறை கூட்டாண்மை சாலை வரைபடத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றன. இது முக்கிய இராணுவ வன்பொருள் மற்றும் தளங்களின் இணை மேம்பாடு மற்றும் இணை உற்பத்தியை வழங்கும். தவிர, விண்வெளி, நிலப் போர், சைபர் ஸ்பேஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எளிதாக்கும்.
இந்தியா – பிரான்ஸ் பாதுகாப்பு தொழில்துறை சாலை வரைபடம் ரோபோட்டிக்ஸ், தன்னாட்சி வாகனங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை எளிதாக்கும். செயற்கைக்கோள் ஏவுதலுக்கான ஒத்துழைப்புக்காக நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மற்றும் பிரான்ஸின் ஏரியன் ஸ்பேஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் காஸா போர் மற்றும் தீவிரவாதம், மனிதாபிமான அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் விவாதித்தனர். அதோடு, இரு தலைவர்களும் செங்கடலில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் இடையூறுகள், உண்மையான முன்னேற்றங்கள் பற்றிய முன்னோக்குகளையும் பரிமாறிக் கொண்டனர்” என்றார்.