இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “75-வது குடியரசு தினத்தில் இந்தியாவிற்கு வாழ்த்துகள். எங்கள் தூதரகத்தில் இந்தச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுகிறோம். இந்த தருணத்தில், நெருக்கமான உறவுகள் கொண்ட ஒரு முன்னோக்கிய கூட்டாண்மை மற்றும் எதிர்காலத்தை உருவாக்குவதை தொடர்வோம்” என்று கூறினார்.
இதேபோல், இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன், குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா அடைந்த அசாத்தியமான முன்னேற்றத்திற்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். இந்திய கேட் முன் நிற்கிறேன். ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் உணர்வின் இந்த கொண்டாட்டத்தில் எனது இந்திய நண்பர்களுடன் நானும் இணைகிறேன். பரஸ்பர மரியாதையுடன் கட்டமைக்கப்பட்ட எங்கள் உறவு, ஒவ்வொரு ஆண்டும் வலுவடைகிறது. ஜெய் ஹிந்த்” என்று கூறினார்.
இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இந்திய குடியரசு தினத்தில் மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்கள் இந்திய நண்பர்களுக்கு செழிப்பு, நல்வாழ்வு மற்றும் மிகவும் பிரகாசமான அமிர்த காலமாக இருக்கட்டும். வாழ்க பாரதம். ரஷ்ய – இந்திய உறவு நீண்ட காலம் வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர், அனைவருக்கும் இனிய ஆஸ்திரேலிய தின மற்றும் இந்திய குடியரசு தின வாழ்த்துகள்” என்று கூறினார். மேலும், இந்தியாவுக்கான டென்மார்க், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்கள் குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.