தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பண்ருட்டி தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
என் மண் என் மக்கள் பயணம், திருநாவுக்கரசரை, சைவ சமயத்திற்கு சிவபெருமான் ஆட்கொண்ட, 16 பட்டையுடன் மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக காட்சி தரும் அற்புதக் கோவிலான திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் குடி கொண்டிருக்கும் பண்ருட்டி தொகுதியில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, பொதுமக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்புற்றது.
ஆனால், திமுக அரசு, கட்சியின் சில குடும்பங்கள் மட்டுமே வாழ, ஊழல் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் இதனை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் வேண்டும் என்ற உறுதி, பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, நமது பாரதப் பிரதமர் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த போது, பொருளாதாரத்தில் உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, மத்திய அரசின் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி மூலம் தற்போது 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில், உலக அளவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். எனவே தான், வரும் 2024 பாராளுமன்றத் தேர்தல், நாட்டின் எதிர்காலத்துக்கான தேர்தல். அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கான தேர்தல். சாமானிய மனிதர்களுக்காக, நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பிரதமர் நரேந்திரமோடியை ஆதரிப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.