அயோத்தியில் 67.57 கி.மீ. தூர புறவழிச்சாலை பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலை உலக அளவில் பிரபலப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே, அயோத்தியில் 1,450 கோடி ரூபாயில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டதோடு, 450 கோடி ரூபாயில் இரயில் நிலையமும் மேம்படுத்தப்பட்டது.
மேலும், அயோத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 11,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கும் அயோத்தியில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ், 67.57 கிலோ மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் அயோத்தியில் 67.57 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. லக்னௌ, பஸ்தி கோண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், மேற்கண்ட மாவட்டங்களில் சுற்றுலா ஆன்மீகத் தலங்கள் உட்பட பொருளாதார சமூக மற்றும் தளவாட முனைகளின் இணைப்பை மேம்படுத்த உதவும்.
மேலும், லக்னௌ – கோரக்பூர் பொருளாதார மையங்களுக்கு இடையே அயோத்தி அமைந்திருப்பதால் தோல் கட்டுமானப் பொருட்கள் இரும்பு எஃக்கு போன்ற முக்கிய பொருட்கள் இதன் வழியாகச் செல்கின்றன. தற்போது, இந்த புறவழிச்சாலை தடையின்றி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.
நாட்டில் உட்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை ஒருங்கிணைப்பதே ‘கதி சக்தி’ திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, 16 மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் தளவாடச் செலவுகள் குறைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.