இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 436 ரன்களை எடுத்தது.
தற்போது இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் மைதானத்திற்கு சென்றிருந்தார்.
இவர் போட்டி நடந்த மைதானத்தில் ஓவியத்தை அப்படியே தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். அதிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஒரே ஓவியத்தில் அவர் கொண்டு வந்திருந்தார்.
மைதான மேற்கூரையில் துவங்கி, இருக்கைகள், ரசிகர்கள், வீரர்கள், ஆடுகளம், அம்பயர் முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரே ஓவியத்தில் அவர் தத்ரூபமாக வரைந்தார். இவர் கேன்வாஸ் பெயின்டிங் முறையில் இந்த ஓவியத்தை தீட்டி இருந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஆன்டி பிரவுன் உலகம் முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து வரும் ஓவியக் கலைஞர் ஆவார். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளை வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிகளை நேரில் கண்டு, அதை அப்படியே வரைந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ஓவியமாக வரைய விரும்பி இருக்கிறார். அதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஐதராபாத்திற்கு சென்று போட்டியை நேரில் கண்டு அதை ஓவியமாக வரைந்தார்.
போட்டி ஒளிபரப்பின் இடையிலும் அவரது ஓவியம் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது திரையில் தெரிந்த மைதானத்திற்கும், அவரது ஓவியத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அந்த அளவுக்கு புகைப்படம் போலவே இருந்தது ஆன்டி பிரவுன் வரைந்த ஓவியம்.
இந்த ஓவியம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
https://www.instagram.com/indiancricketteam/reel/C2kWJTGsp2r/