இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. இராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் தேசம் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புகழாரம் சூட்டி கடிதம் எழுதி இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இதையடுத்து, பக்தர்கள் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி இராமரை தரிசனம் செய்தவாறு இருக்கின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும் 22 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியையும் நன்றியுடன் வணங்குவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியிருக்கிறார். இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார்.
அக்கடிதத்தில், “கடந்த 22-ம் தேதி அயோத்தியில் நடந்த இராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வால், லட்சக்கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. இராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.
பகவான் ஸ்ரீராமரைப் போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது. பகவான் இராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.
அதேபோல, பகவான் இராமரின் பாதச் சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.