பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் பிடிஐ கட்சிதலைவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் இந்த வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. ஏற்கனவே பிடிஐ கட்சியின் சின்னமும் பறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிடிஐ கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எலாஹி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது பிடிஐ கட்சித் தலைவர் எலாஹி மற்றும் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் உமர் அஸ்லாம், தாஹிர் சாதிக், சனம் ஜாவேத் மற்றும் ஷௌகத் பாஸ்ரா ஆகியோர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.