பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு தொடங்கி இருக்கிறது. லாலுவின் மகன்கள் இருவரில் ஒரு துணை முதல்வராகவும், மற்றொருவர் அமைச்சராகவும் இருக்க, மகள் எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இதை சுட்டிக்காட்டும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கூறினார். உடனே, லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கங்களில் நிதிஷ்குமாரை வறுத்தெடுத்தார். இது இரு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக, நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்எல்ஏக்கக்களை இன்று காலை சந்தித்து நிதிஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார். இதனைத்தொடர்ந்து அவர் பீகார் ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளிப்பார் என கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அவர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைப்பார் என்றும் தெரிகிறது.
இதனிடையே பாட்னாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.