அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா தத்தா உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் ஏகப்பட்ட அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், கூட்டணியையே மாற்றி இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமார், திடீரென அக்கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கியமாகி மீண்டும் முதல்வராகி இருக்கிறார்.
இந்த சூழலில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். இதற்கான நிகழ்ச்சி கௌகாத்தி பாசிஸ்தாவிலுள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பாபேஷ் கலிதா, அஸ்ஸாம் கேபினட் அமைச்சர்கள் ஜெயந்தா மல்லபருவா, பிஜூஷ் ஹசாரிகா, எம்.எல்.ஏ.க்கள் திகந்தா கலிதா, மனாப் தேகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா, கும்தாய் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிஸ்மிதா கோகோய், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் (ஏ.ஏ.எஸ்.யு.) முன்னாள் தலைவர் தீபங்க குமார் நாத் மற்றும் ஏ.ஏ.எஸ்.யு. முன்னாள் துணைத் தலைவர் பிரகாஷ் தாஸ், திலீப் பால், புருஷோதம் டோலி, மிலன் ஜோதி ராய், ஹிமான் பர்மன், ஜிதுமோனி புயான், தேபாஜித் பதிர், பிரசாந்தா ஹசாரிகா, மனோரஞ்சன் நாத், போனி பதக், ஷியாமல் நாராயண் தேப் மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஞான சக்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இவர்களில், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அங்கிதா தத்தா, தன்னை அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக அங்கிதா தத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்துவந்த அங்கிதா தத்தா பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தன. இந்த சூழலில், பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும், பலமாகவும் அமைந்திருக்கிறது.