உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் உடுவம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராசு. இவர், தனது குடும்பத்தாருடன் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால், வந்த சுற்றுலா பேருந்து காரின் மீது அதிவேகமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் சிக்கி, காரில் பயணம் செய்த அழகுராசுவின் மனைவி ஜெயா மற்றும் மூத்த மகள் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அழகுராசு மற்றும் அவரது இளைய மகள் வைதேகி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அதிவேகமாக காரின் மீது மோதிய சுற்றுலா பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்தின் காரணமாக, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.