பிரதமர் நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பதவியேற்கும் போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
உதம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கடந்த 2014 ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபோது, உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது என்றார்.
நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி பத்து ஆண்டுகளுக்குள் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், இந்த ஆண்டு அது 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமராக 3-வது முறையாக மோடி பதவி ஏற்கும் போது உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் அவர் கூறினார். 2047ஆம் ஆண்டு உலகின் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2023-24 நிதியாண்டில், உலகப் பொருளாதாரம் 3 சதவீதத்துக்கும் அதிகமாக வளர போராடிக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதத்துடன் வளர்ச்சியடைந்ததாகவும், அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய ஃபின்டெக் பொருளாதார நாடாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியா உலகளவில் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
















