பிசி ஜார்ஜ் தலைமையிலான கேரள ஜனபக்சம் (மதச்சார்பற்ற) கட்சி, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) இணையலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. பாஜக சார்பில்,பிரகாஷ் ஜவடேகர், முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.கேரள ஜனபக்சம் சார்பில் பி.சி.ஜார்ஜ், ஷோன் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பி.சி. ஜார்ஜ், எங்கள் கட்சி உறுப்பினர்கள் இந்த இணைப்பை விரும்புகிறார்கள். இந்தியா அதன் வரலாற்றில் சிறந்த பிரதமர்களில் ஒருவரை பெற்றிருப்பது அதிர்ஷ்டம். அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கு இருக்கைக்கு முன்னுரிமை இல்லை. பாஜக என்னை போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன். மக்களவை தேர்தலுக்கு முன் ஒரு முடிவை எடுப்போம் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப்போவதாக ஜார்ஜ் அறிவித்திருந்தார். முன்னதாக வெளியான தகவல்களின்படி, வரும் தேர்தலில் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது.
2018ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பிசி ஜார்ஜ், 2019ல் கூட்டணியில் இருந்து வெளியேறினார். கேரள காங்கிரஸின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏழு முறை பூஞ்சார் எம்எல்ஏவாக அவர் பணியாற்றியுள்ளார்.