நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவின் தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும்,நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான பட்ஜெட் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துரைத்த அவர், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், பட்ஜெட்டில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.
நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், மொத்த செலவினம் இந்த பட்ஜெட்டில் வரலாறு காணாத வகையில் ரூ.11,11,111 கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவில் 21-ம் நூற்றாண்டின் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும் அவர் கூறினார். வந்தே பாரத் ரயில் தரத்தில் 40,000 நவீன பெட்டிகளைத் தயாரித்து அவற்றைப் பயணிகள் ரயில்களில் இணைப்பதற்கான அறிவிப்பு குறித்தும் அவர் தெரிவித்தார். இது நாட்டின் பல்வேறு ரயில் பயணத்தில் கோடிக்கணக்கான பயணிகளின் வசதி, பயண அனுபவத்தை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறோம், அதை அடைகிறோம், பின்னர் இன்னும் பெரிய இலக்கை நாங்களே நிர்ணயிக்கிறோம்” என்று கூறினார்.
ஏழைகள், நடுத்தர மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், கிராமங்கள், நகரங்களில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்படுவது குறித்தும், மேலும் 2 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கை அதிகரிப்பது குறித்தும் தெரிவித்தார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி 2 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். தற்போது, இந்த இலக்கு 3 கோடி லட்சாதிபதிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கியதற்காகவும், அதன் பயன்களை அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு விரிவுபடுத்தியதற்காகவும் பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்த பட்ஜெட் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கூரை சூரியசக்தி மின்சாரத் தகடு இயக்கத்தின் மூலம் 1 கோடி குடும்பங்கள் இலவச மின்சாரத்தைப் பெறுவார்கள் என்றும், அதிகப்படியான மின்சாரத்தை அரசுக்கு விற்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை வருவாய் ஈட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நானோ டிஏபி பயன்பாடு, விலங்குகளுக்கான புதிய திட்டம், பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்ட விரிவாக்கம், தற்சார்பு எண்ணெய் வித்து இயக்கம் ஆகியவை விவசாயிகளின் வருவாயை அதிகரித்து செலவுகளைக் குறைக்கும் என்று குறிப்பிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.