ஞானவாபி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
அதைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில், மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்னர் இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து அங்கு நேற்று பூஜை தொடங்கியது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1993 ஆம் ஆண்டு இந்துக்களிடம் இருந்து சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட உரிமைகளை இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு மீட்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் தரப்பு முன்வைத்த மறுக்க முடியாத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தீர்ப்பு, நீதியின் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்றும், இந்த ஆதாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததற்காக நீதிமன்றத்திற்கு பாராட்டுகள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.