யுபிஐ பரிமாற்ற செயல்முறை பிரான்ஸிலும் ஏற்கப்படும் அது புகழ்பெற்ற ஈஃபிள் டவரில் இருந்து தொடங்கும் என பாரத பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது.
உலகமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. இப்போதெல்லாம் அனைவரின் பர்சில் பணம் இருப்பதை விட கார்டு தான் அதிகமாக இருக்கிறது.
பணத்தை கையால் எடுத்து கொடுக்கும் காலம் மாறி ஸ்கேன் மூலம் பணம் கொடுக்கும் காலம் வந்துள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது.
பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.
இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
Great to see this- it marks a significant step towards taking UPI global. This is a wonderful example of encouraging digital payments and fostering stronger ties. https://t.co/jf1sTf41c5
— Narendra Modi (@narendramodi) February 2, 2024