கென்யா தலைநகர் நைரோபியில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்து சிதறியதில், அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா தலைநகர் நைரோபியில் எரிவாயு நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில், அருகிலுள்ள வீடுகள், வாகனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே மீட்புக் குழுவினர் அப்பகுதியில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.