அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழா முடிவடைந்த நிலையில் மீண்டும் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக கோயில் கட்டுமான குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் ராமர் கோவிலின் இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அயோத்தி ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் ஸ்ரீ ராமரின் தர்பார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் இந்த பணிகள் இந்த வருட இறுதியில் முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கோவிலின் கீழ் பீடத்தில் சிலை அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.