ஆன்லைன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் பலரும் பயணம் செய்து வருகின்றனர். அது போன்ற பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் 3 பயணிகள் கம்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட போக்குவரத்து கழங்களில் ஆன்லைன் மூலம் மொத்தம் 80,000 டிக்கெட்கள் பதிவு செய்ய முடியும். ஆனால், ஒரு நாளைக்கு 6,000 முதல் 8,000 டிக்கெட்டுகள் வரை மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
இதனால், திங்கள் முதல் வியாழன் வரை 65 சதவீதம் வரை பயணிகள் இல்லாமல் காலி பேருந்துகள் செல்கிறது. எனவே, 85 முதல் 90 சதவீதம் வரை பேருந்தில் பயணிகள் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். அதை நோக்கிய பயணத்தை தொடங்கி உள்ளோம். அதன் முதற்கட்டமே இந்த முயற்சி என்றார்.
கடந்த தேர்தலின்போது திமுக மக்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை செய்து தருவதாக தெரிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த உடன் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதேபோல் இல்லாமல், இந்த திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்தி, பயணிகளுக்கு பரிசு வழங்கினால், பயணிகள் உள்ளபடியே மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.