பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட காமன்வெல்த், ஒத்துழைப்பு உணர்வுடன் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்ட முடியும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஸ்ரபுதுதில்லியில் நேற்று (2024 பிப்ரவரி 4,) நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க (CLEA) – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு (CASGC)-2024-ன் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,
சரியானது மற்றும் நியாயமான கருத்துகள் தர்க்க ரீதியாக வலுவானதாக இருக்கும் என்று கூறினார். இந்த மூன்று பண்புகளும் இணைந்து ஒரு சமூகத்தின் ஒழுங்கை வரையறுக்கின்றன என்று தெரிவித்தார்.
அதனால்தான் சட்டத் தொழில் மற்றும் நீதித்துறைப் பிரதிநிதிகள்தான் இதை நிலைநிறுத்த உதவுகிறார்கள் என்று தெரிவித்தார். இவை சவாலுக்கு உட்படுத்தப்பட்டால், வழக்கறிஞர்களாகவோ, நீதிபதிகளாகவோ, சட்ட மாணவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ அவர்கள் அதைச் சரி செய்ய மிகவும் முயற்சி செய்கிறார்கள் என்று கூறினார்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை “சமூக, பொருளாதார, அரசியல் நீதி” பற்றி பேசுகிறது என்று கூறினார். எனவே, ‘நீதி வழங்கல்’ பற்றி நாம் பேசும்போது, சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீப காலங்களில், உலகம் பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், நீதி என்ற கருத்தில் இந்த மாறுபட்ட அம்சங்களுடன் சுற்றுச்சூழல் நீதியையும் நாம் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
சுற்றுச்சூழல் நீதியின் பிரச்சினைகள் பெரும்பாலும் எல்லை தாண்டிய சவால்களை முன்வைக்கின்றன என்று தெரிவித்தார். ‘நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்’ என்ற இந்த மாநாட்டின் முக்கிய பகுதியாக அவை அமைகின்றன என்று குறிப்பிட்டார்.
எல்லைகளைக் கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளை காட்டும் ஒரு பொதுவான பாதையை உருவாக்கும் பொறுப்பை காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கம் (CLEA) ஏற்றுக்கொண்டிருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
‘நீதிக்கான அணுகல்- இடைவெளிகளை நிவர்த்தி செய்தல்’ என்பது மாநாட்டின் துணைக் கருப்பொருள்களில் ஒன்று என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், பல்வேறு பிரதிநிதிகள், வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களின் பங்கேற்பின் மூலம் மாநாட்டின் கலந்துரையாடல்கள் பயனுள்ள விளைவுகளை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உலகளாவிய விவாதங்களில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்லாமல் பழமையான ஜனநாயக நாடு என்பதையும் வரலாறு காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.
இந்த வளமான மற்றும் நீண்ட ஜனநாயக பாரம்பரியத்துடன், நவீன காலத்தில் நீதி வழங்குவதில் இந்தியா தமது அனுபவங்களை உலகுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்தார்.