உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் டேராடூனில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதனிடையே டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக பாஜக தேசிய நிர்வாகிகளின் முதற்கட்ட கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய செயற்குழு, தேசிய கவுன்சில் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மக்களவை தேர்தல் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மாநில தலைமை செய்தி தொடர்பாளர்கள், உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.