ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை நிதிக்குழு தான் தீர்மானம் செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் சுமையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரி வருவாயை அதிகரிப்பது, பொது செலவின செயல்திறனை அதிகரிப்பது, நிதி பற்றாக்குறையை குறைப்பது, உற்பத்தி திறனை அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான். அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
நிதி குழு பரிந்துரைப்பதை தான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள். பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலம் என நிதி ஒதுக்க எந்த உரிமையும் தமக்கு இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.