“திட்டப்பயன்கள் முழுமையாக மக்களை சென்றடைவது என்பதே உண்மையான மதச்சார்பின்மை- இதுவே உண்மையான சமூக நீதி -இது கோவாவிற்கும் நாட்டிற்கும் மோடியின் உத்தரவாதம்” எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் ரூ.1330 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் இன்று தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் நரேந்திர மோடி பார்வையிட்டார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் கல்வி, விளையாட்டு, நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுலாத் துறைகளில் உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிப்பது போன்றவை அடங்கும்.
வேலைவாய்ப்புத் திருவிழாத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
கோவாவின் இயற்கை அழகு மற்றும் அழகிய கடற்கரைகளை எடுத்துரைத்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு கோவா விருப்பமான விடுமுறை இடமாக உள்ளது என்று கூறினார்.
ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கோவாவில் எந்தப் பருவத்திலும் அனுபவிக்க முடியும் என்று குறிப்பிட்டார். கோவாவில் பிறந்த துறவிகள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
துறவி சோஹிரோபநாத் அம்பியே, நாடக ஆசிரியர் கிருஷ்ணா பட் பாந்த்கர், பாடகர் கேசர்பாய் கெர்கர், ஆச்சார்யா தர்மானந்த் கோசாம்பி மற்றும் ரகுநாத் அனந்த் மஷேல்கர் ஆகியோரை அவர் நினைவு கூர்ந்தார்.
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் அருகிலுள்ள மங்குஷி கோயிலுடனான தமது நெருங்கிய தொடர்பையும் எடுத்துரைத்தார். மார்கோவில் உள்ள தாமோதர் சால் மூலம் சுவாமி விவேகானந்தர் புதிய உத்வேகம் பெற்றார் என்று அவர் மேலும் கூறினார்.
“கொய்கோ சாய்ப்” என்று பிரபலமாக அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் புனித நினைவுச் சின்னங்களின் கண்காட்சி இந்த ஆண்டு நடைபெறவுள்ளது குறித்தும் பிரதமர் பேசினார். இந்தக் கண்காட்சி அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சின்னம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜார்ஜியாவின் புனித ராணி கெட்டேவனையும் நினைவு கூர்ந்தார்.
அவரது புனிதச் சின்னங்கள் வெளியுறவுத் துறை அமைச்சரால் ஜார்ஜியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமூகத்தினரின் அமைதியான சகவாழ்வு ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 1300 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் குறித்து விவரித்தவர், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான திட்டங்கள் கோவாவின் வளர்ச்சிக்கு புதிய உந்துதலைக் கொடுக்கும் என்று கூறினார்.
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் மற்றும் தேசிய நீர் விளையாட்டு மற்றும் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதி வளாகம், 1930 பணி நியமன கடிதங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
கோவா பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறியதாக இருந்தாலும், அது சமூக ரீதியாக வேறுபட்டது எனவும், பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக அமைதியாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்திய அவர், மாநிலத்தின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சிகளுக்கு எப்போதும் பொருத்தமான பதிலடி கொடுக்கும் கோவா மக்களின் உணர்வைப் பாராட்டினார்.
சுயசார்பு கோவா பற்றி குறிப்பிட்டவர், கோவா அரசின் நல்லாட்சி மாதிரியை பாராட்டினார். இது நல்வாழ்வின் அளவுகோலில் கோவா மக்களின் முதன்மையான நிலைக்கு வழிவகுத்தது என்றார்.
இரட்டை இன்ஜின் அரசின் காரணமாக கோவா வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். மத்திய அரசின் பல திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர், மின்சார இணைப்புகள், சமையல் எரிவாயு இணைப்புகள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டு திட்டப்பலன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைவது பற்றி குறிப்பிட்டார்.
திட்டப்பலன்கள் முழுமையாக சென்றடைவது, பாகுபாட்டை நீக்குவதற்கும் அனைத்து பயனாளிகளுக்கும் நன்மைகளை முழுமையாக வழங்குவதற்கும் வழிவகுக்கிறது என்று அவர் தெரிவித்தார். முழுமையாக பலன்கள் மக்களைச் சென்றடைவது என்பது உண்மையான மதச்சார்பின்மை எனவும், இதுவே உண்மையான சமூக நீதி என்றும், இது கோவாவிற்கும் நாட்டிற்கும் மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் கூறினார்.
கோவாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பயன்களைப் பெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் உதவியுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பட்ஜெட் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், திட்டங்களின் செறிவூட்டல் குறித்த அரசின் தீர்மானத்திற்கு இது உத்வேகம் அளித்துள்ளது என்றார். 4 கோடி பாதுகாப்பான வீடுகள் என்ற இலக்கு ஏற்கனவே எட்டப்பட்ட பின்னர், ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளுக்கு அரசாங்கம் இப்போது உத்தரவாதம் அளிக்கிறது என்று அவர் அறிவித்தார். பாதுகாப்பான வீடுகளைப் பெறுவது குறித்து பின்தங்கியவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோவா மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், ஆயுஷ்மான் திட்டம் ஆகியவை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைத்தவர், மீனவ சமூகத்திற்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் ஆதாரங்களை இது மேலும் அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் கடல் உணவு ஏற்றுமதி மற்றும் மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறினார். இதுபோன்ற முயற்சிகள் மீன்வளத் துறையில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
மீன் வளர்ப்பவர்களின் நலனுக்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, பிரத்யேக அமைச்சகம் அமைத்தல், கிசான் கடன் அட்டை வசதி, காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்துதல் மற்றும் படகுகளை நவீனப்படுத்துவதற்கான மானியம் ஆகியவற்றை குறிப்பிட்டார்.
ஏழைகளின் நலனுக்காக பெரிய திட்டங்களை செயல்படுத்துவதோடு, உள்கட்டமைப்பிலும் இரட்டை இன்ஜின் அரசு சாதனை முதலீடுகளை செய்து வருகிறது என்று கூறியவர், நாட்டில் சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்களின் வேகமான வளர்ச்சியை எடுத்துரைத்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் ஒவ்வொரு நபரின் வருமானமும் அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும், கோவாவை ஒரு சரக்குப் போக்குவரத்து மையமாக நிறுவுவதற்கும் அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து கூறுகையில், இதற்காக எங்கள் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
கோவாவில் மனோகர் பாரிக்கர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களைத் தொடர்ச்சியாக இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் இரண்டாவது நீளமான கேபிள் பாலமான நியூ ஜுவாரி பாலத்தையும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சாலைகள், பாலங்கள், ரயில் வழித்தடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை காரணமாக கோவாவில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வளர்ச்சி கோவாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, இந்தியாவை ஒரு முழுமையான சுற்றுலா தலமாக நிலைநிறுத்துவதற்கான அரசின் முயற்சிகளை சுட்டிக்காட்டினார்.
நம் நாட்டில் அனைத்து வகையான சுற்றுலாவும் ஒரே விசாவில் கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். சுற்றுலா தலங்கள், கடலோர பகுதிகள் மற்றும் தீவுகளின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை முந்தைய அரசுகளுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். கோவாவின் கிராமப்புறங்களில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலாவின் திறனை எடுத்துரைத்த பிரதமர், உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கோவாவின் உள்பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதை சுட்டிக் காட்டினார்.
கோவாவை மேலும் கவர்ச்சிகரமான இடமாக மாற்ற நவீன வசதிகளை மேம்படுத்தும் அரசின் முயற்சிகளையும் பட்டியலிட்டார்.
மாநாட்டு சுற்றுலாவுக்கான சுற்றுலாத் தலமாக கோவாவை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், 2024 ஆம் ஆண்டின் இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியை இன்று தாம் தொடங்கிவைத்ததை நினைவு கூர்ந்தார்.
கடந்த ஆண்டுகளில் கோவாவில் பல முக்கியமான ஜி 20 கூட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான தூதரக நிலையிலான கூட்டங்கள் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், உலக கடற்கரை கைப்பந்துப் போட்டி, ஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி மற்றும் 37 வது தேசிய விளையாட்டு போன்ற போட்டிகள் கோவாவில் நடைபெற்றதையும் அவர் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கான மிகப்பெரிய மையமாக கோவா மாறும் என்று அவர் உறுதியளித்தார்.
கோவாவில் கால்பந்தின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், விளையாட்டில் விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக பிரம்மானந்த் ஷங்க்வால்கருக்கு பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்று கூறினார்.
கல்வியில் அரசு கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டியவர், கோவாவில் பல்வேறு நிறுவனங்கள் நிறுவப்பட்டு, மாநிலத்தை ஒரு முக்கிய கல்வி மையமாக மாற்றியிருப்பதைக் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினருக்கும் பயனளிக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 1 லட்சம் கோடி ரூபாய் நிதி குறித்தும் அவர் தெரிவித்தார்.
கோவாவின் விரைவான வளர்ச்சிக்கு கூட்டு முயற்சி தேவை என்று வலியுறுத்திய பிரதமர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மத்திய சுற்றுலா துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.