இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 9, 2024) கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர்,
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை அடைவதில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் இணையற்ற பங்களிப்பை செய்துள்ளது என்றார். இந்த நிறுவனம் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் திறமையாக மேற்கொண்டு வருவது மட்டுமின்றி, அத்தகைய ஆராய்ச்சிகள் களத்தில் சென்றடைவதையும் உறுதி செய்துள்ளது எனறு கூறினார்.
இந்த நிறுவனம் 200-க்கும் அதிகமான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 2005க்கும் 2020-க்கும் இடையே, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 100-க்கும் அதிகமான பயிர் வகைகளை உருவாக்கியுள்ளது. அதன் பெயரில் 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் அது கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்று கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.
எனவே, நமது பொருளாதாரத்தின் இந்த அடித்தளம் முடிந்தவரை வளர்வதையும், அதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதி செய்வது மிகவும் முக்கியமாகும். விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், புதிய வேளாண் முறைகளை ஊக்குவிக்கவும், சுமூகமான பாசன முறையை ஏற்படுத்தவும் அரசு பணியாற்றி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு வருமானப் பாதுகாப்பை வழங்குவதற்காக அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை நாம் அனைவரும் அறிவோம் என்று கூறினார். நமது விவசாய சகோதர சகோதரிகளில் பலர் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதையும், வறுமை வாழ்க்கையிலிருந்து வளமான வாழ்க்கையை நோக்கிச் செல்வதையும் உறுதி செய்வதில் நாம் அதிக வேகத்துடன் முன்னேற வேண்டும்.
2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும்போது, இந்திய விவசாயிகள் இந்தப் பயணத்தின் முன்னோடிகளாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.