பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் பயணத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது சிரமங்களில் இருந்து நம்மை காப்பாற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியன் கோவில் அமைந்திருக்கும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பேரன்புடனும் ஆதரவுடனும் எனது பயணம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 2004 – 2014, திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு 32% மட்டுமே. ஆனால் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பங்கீடு 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நமது பாரதப் பிரதமர் மோடி கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். ராமர் கோவில், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், அரபு நாடுகளில் நீக்கப்பட்ட தலாக் முறையை ஒழித்து, இஸ்லாமிய சகோதரிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுத்தது என, 60 ஆண்டுகளாகத் தீர்க்காமல் வைத்திருந்த சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு கண்டுள்ளார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 க்கும் அதிகமான இடங்கள் பெற்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் இம்முறை துணை நிற்பதும் உறுதி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.