இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், நடிகைகள், ரம்பா, தமன்னா, நடிகர்கள் சிவா, யோகி பாபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைக் காண ரூ.25,000 செலுத்தியவர்களுக்கு முன்பகுதியும், ரூ.7,000 செலுத்தியவர்களுக்கு நடுப்பகுதியும், ரூ.3,000 செலுத்தியவர்களுக்குப் பின்பகுதியும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், இசை நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இலவச பார்வையாளர்கள் பலரும் தடுப்பை உடைத்துக் கொண்டு கட்டண பகுதிக்குள் நுழைந்ததால், மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பிரபலங்கள் கேட்டுக் கொண்ட போதும் இளைஞர்கள் கட்டுப்படவில்லை. இதனால், மேடை, மரம் ஆகியவற்றில் ஏறி அடாவடி செய்தனர். இதனால் இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஆனாலும், கும்பலை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.