ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் விக்சித் பாரதத்தின் தூண்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
விக்சித் பாரத் விக்சித் குஜராத் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, குஜராத் முழுவதும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மற்றும் பிற வீட்டுத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட 1.3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை திறந்து வைத்தார்.
சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருப்பது ஒருவரின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் என்றும், பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் தனது அரசாங்கம் அதையே செய்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
எந்தவொரு ஏழைக்கும் சொந்த வீடுதான் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம். ஆனால் காலப்போக்கில் குடும்பங்கள் அதிகரித்து வருவதால் புதிய வீடுகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்பதே நமது அரசின் முயற்சி என்றும் பிரதமர் மோடி கூறினார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விரைவான கட்டுமானப் பணியை உறுதிசெய்து, ஆவாஸ் யோஜனாவின் திட்டத்தை மாற்றியுள்ளோம். டெலிவரியை உறுதிசெய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நபருக்கும் சரியான வீடு இருக்க வேண்டும் என்பதே எனது அரசின் முயற்சி” என்று பிரதமர் மேலும் கூறினார்.
25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்ததே தனது அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், மேலும் பலவற்றைச் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று விரும்புகிறது. இதற்கு ஒவ்வொரு குடிமகனும் அவரவர் வழியில் பங்களிப்பு செய்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 24.82 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.