பலவீனமான 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இருந்து பலமான “முதல் 5” நிலைக்கு முன்னேறிய இந்தியாவின் கடந்த பத்தாண்டு கால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை உற்சாகப்படுத்தும் என மத்தியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைஇணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் குழுமம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் மாற்றத்தின் சக்திகளை அளவிடுதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சி எந்தவொரு பொருளாதார மாணவரையும் உற்சாகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்து ஆண்டுகள், நம்பிக்கையை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். பல்வேறு உலகளாவிய குறியீடுகளில் இந்தியா விரைவான உயர்வைப் பதிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
உலகளாவிய புதுமைக் கண்டுபிடிப்புக் குறியீட்டில் 2014-ம் ஆண்டில் நாம் 81-வது இடத்தில் இருந்ததாகவும் தற்போது 41 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். உலக அளவில் 3-வது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விண்வெளி சீர்திருத்தங்கள் மூலம் பெரிய விண்வெளித் திட்டங்கள் சாத்தியமானது என்று அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளித் துறையில் ஒரே ஒரு புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்தது எனவும் தற்போது 190 தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டில் தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
7,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி கொண்ட இந்தியாவில், மிகப்பெரிய கடலோர செல்வ வளத்தைப் பயன்படுத்த ஆழ்கடல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் சிற்பிகளாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.