17-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளில், உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திருநங்கைகளுக்கு 17 ஆயிரம் அடையாள அட்டைகளை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், முக்கிய காரணங்களுக்காக, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. 17-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. திருநங்கைகளுக்கு ஒரு அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தோற்றின் போது, நாடு முழுவதும் இலவச தடுப்பூசி ஊசி போடப்பட்டது. இதன் மூலம், மக்களுக்கு நம்பிக்கை வந்தது. யாரும் உதவியற்றவர்களாக உணரக்கூடாது.
இதுவரை 16-17 ஆயிரம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைக்கு பத்ம விருது வழங்கி உள்ளோம். 17-வது மக்களவை உறுப்பினர்கள் அவர்கள் மீது அக்கறை காட்டி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்ய முயன்றனர் என்று கூறினார்.