இமாச்சலின் சட்லஜ் நதியில் 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டத்தை அடுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை சென்னையில் இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
சென்னை மாநகராட்சி அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). இவர் கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு தனது நண்பர் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.
இமாச்சலின் லாஹஸ் ஸ்பிதி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தன்ஜினின் காரில் காசா பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் சிம்லாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கடந்த பிப்ரவரி 04 ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமி குறித்து எந்த தகவலும் இல்லை. ஆகையால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணியில் தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். முதலில் அவரது உடைமைகள், செல்போன் கைப்பற்றிய நிலையில் 8வது நாளான நேற்று 5 கிலோ மீட்டர் தொலைவில் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மீட்பு படை வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
இதனையடுத்து வெற்றி துரைசாமியின் சடலத்தை சிம்லா இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. பின்னர் இன்று மாலை அவரது சி. ஐ. டி. நகர் இல்லத்தில், 5 மணிக்கு பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.