தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.
‛தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களை , பிரதமர் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்’ என்ற உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
புதிய சட்டத்தின்படி, தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் பிரதமர் எதிர்க்கட்சி தலைவர், பிரதமரின் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர்த்து அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் குழுவில் இடம்பெற்றார்.
இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மனுவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தொடர்ந்த பொது நல மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷனர் அனுப் சந்திரா நாளையுடன் ஓய்வு பெற உள்ளதால், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிய சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவை, நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.