எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நான் சந்திக்கும் போதெல்லாம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்களின் முக்கிய பங்கை அவர் பாராட்டுவார் என்று ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி, சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கலந்துக் கொள்ளும் ‘அஹ்லான் மோடி’ (வணக்கம் மோடி) என்ற தலைப்பில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரத பிரதமர் மோடியைக் காண ஏராளமான இந்திய வம்சாவளியினர் இந்த மைதானத்திற்கு வந்தனர்.
பிரதமர் மோடி மைதானத்திற்குள் நுழைந்த போது, இந்திய வம்சாவளியினர் மோடி, மோடி என உற்சாகமாக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, “ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் உங்கள் அனைவரின் மீதும் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நான் கொரோனா தொற்றுநோய் பரவலின்போது, பார்த்தேன். கொரோனா பரவலின் போது, அமீரகத்தில் உள்ள இந்தியர்களை நாங்கள் மீட்டெடுக்க முயற்சி செய்கிறோம் என்று நான் சொன்னபோது, அவர் என்னைக் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அவர் அனைத்து மக்களையும் நன்றாக கவனித்துக் கொண்டு, தடுப்பூசிகளுக்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதன்மூலம், என் கவலையைப் போக்கினார்.
கடந்த மாதம், ஐக்கிய அரபு அமீரக அதிபர் குஜராத்துக்கு வந்தார். அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களை கவனித்துக் கொண்ட விதத்திற்காக பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத்தை நான் சந்திக்கும் போதெல்லாம், அவர் உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கை அவர் பாராட்டுகிறார். இந்த சயீத் மைதானத்தில் கூட, இந்தியர்களின் வியர்வையை உணர முடியும் என்று கூறினார்.