நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் பா.ஜ.க-வில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் முக்கியப் புள்ளியாக வலம் வந்த அசோக் சவான், மிலிந் தியோரா, பாபா சித்திக், ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜிதின் பிரசாத், பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ், ஆர்.பி.என் சிங் மற்றும் ஜெய்வீர் ஷெர்கில் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்குக் குட்பை சொல்லிவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால், காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பலம் இழந்துவிட்டது. பல்வேறு பகுதிகளில் துண்டுதுண்டாக உடைந்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு அடியாக, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விபாகர் சாஸ்திரி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். குறிப்பாக, லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்த மோடியால் மட்டுமே முடியும். அதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய முடியும். அதனால்தான் பா.ஜ.க-வில் இணைந்தேன் என்றார்.
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரியும் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.