கடந்த 2011 – 2015-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்ட விரோதமாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், கடந்த ஜூன் 14 -ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதி மன்றத்தில் தனக்கு ஜாமீன் கிடைக்கும் எனக் கருதி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்றும் அது தொடர்பான விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், 30 -வழக்குகளில் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்பமுடியாது என அமலாக்கத்துறை தனது வாதத்தை முன்வைத்தது.
செந்தில் பாலாஜி தரப்பின் கருத்தை தெரிவிக்க விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (பிப்.19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.
இதனிடையே, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக்கோரிய மனுவை, தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து, நாளை, அதாவது 16-ம் தேதி குற்றச்சாட்டை பதிவு செய்ய செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.