பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இரு நாட்கள் நடைபெறும் செயற்குழு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஏழைகளுக்கான நலத்திட்ட பணிகள், நாட்டின் வளர்ச்சி, உலக அளவில் பாரத்தின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒவ்வொரு பூத் பொறுப்பாளர்களும் வாக்குச் சாவடிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், 2019 ஆம் ஆண்டை விட 2024 மக்களவை தேர்தலில் குறைந்தது 370 வாக்குகளையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
மக்களவை தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் மோடி தெரிவித்தார்.