கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு படகு மூலம் 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் கடத்திவரப்பட்டதை அறிந்த போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
இதில், தனுகா ரோஷன் லடியா, வெள்ள சுரங்கா, திலீபன், விக்னேச பெருமாள், ஐயப்ப நந்து, செல்வகுமார், குணசேகரன், புஷ்ப ராஜா, முகமது அஸ்மின், அழகப்பெருமாகச் சுனில் காமினி பொன்சகோ, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ உள்ளிட்டோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்காக ஆயுதங்கள் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற விவகாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த வழக்கில், சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரை 14-வது குற்றவாளியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தைடெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சி மூலம் நிதி பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது.
மேலும், சினிமாவில் படம் தயாரிப்பதற்கும் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குக் கட்சி நிதியாக வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆதிலிங்கத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.