தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமை மூலமாக 27,858 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது என்றும், இதுவரை மொத்தம் 60 ஆயிரத்து 567 அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் புள்ளி விவரங்களை மாற்றி பேசியுள்ளார் என சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது, கடந்த 3 ஆண்டுகளில் 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 3 ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், மேலும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், 5 ஆண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை, 5 ஆண்டுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒரு லட்சம் பேருக்கு வேலை என மொத்தம் ஆறரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
தி.மு.க ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், 10 சதவீதம கூட அரசு வேலை வழங்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அல்லது தி.மு.கவினரிடம் இருந்து உரிய பதில் இல்லை.