காலரா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜாம்பியா நாட்டிற்கு உதவும் வகையில், இந்தியா சார்பில், மருந்து பொருட்கள் உட்பட சுமார் 3.5 டன் உதவிப் பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை இந்தியாவின் தூதர் ஜாம்பியா அரசிடம் ஒப்படைத்தார்.
ஜாம்பியாவில் தற்போது காலரா நோய் அதிகரித்து வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை, காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 526 ஆக உள்ளது. 613 பேர் உயிரிழந்து உள்ளனர். குறிப்பாக, லுசாகா மாகாணத்தில் காலரா பாதித்தவர்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், ஜாம்பியா நாட்டுக்கு தேவையான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்கள் இந்தியா சார்பில், இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய தூதர் உதவிப் பொருட்களை ஜாம்பியா அரசிடம் ஒப்படைத்தார்.
முன்னதாக, கடந்த 6-ஆம் தேதி மருந்துகள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.