இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகிய அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். இந்தியாவில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்றையப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக அணியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.
அவருக்கு பதிலாக மாற்று வீரராக இந்திய அணியில் படிக்கல் செயல்பட்டார். மாற்று வீரர் பீல்டிங் மட்டும் செய்ய முடியும் என்பதால் அஸ்வினின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது .
இந்நிலையில் 4வது நாளான இன்று அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.