ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டுள்ளனர். உலகில் காணப்படும் பாதுகாப்பு சவால்களை பற்றி உயர்மட்ட அளவிலான விவாதங்களை நடத்துவதற்கான ஒரு தனித்துவ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இதில், போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரேடோஸ்லா சிகோர்ஸ்கி உடனான சந்திப்பில், இரு நாட்டு உறவுகள் குறித்தும், இரு நாடுகள் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும் இருவரும் விவாதித்தனர். மேலும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதேபோல், போர்ச்சுகல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோவாவோ கிராவினோவுடனான சந்திப்பில், இரு நாடுகள் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். சமீபத்திய உலகளாவிய வளர்ச்சி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பெல்ஜியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹத்ஜா லாபீப் உடனான சந்திப்பில், இருதரப்பு உறவுகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய சர்வதேச பாதுகாப்பு மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.