மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது.
அந்த நிதி மூலம், அரசு பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி, மேஜை உள்ளிட்ட பள்ளி தளவாடப் பொருள்களும், பள்ளி நூலகத்துக்குத் தேவையான நூல்களும், பள்ளி ஆய்வகத்துக்குத் தேவையான ஆய்வு உபகரணங்களும் வாங்கப்படுகிறது.
இதற்கு முன்பு ஆர்.எம்.எஸ்.ஏ. என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நிதியை நேரடியாகவே ஒப்படைக்கப்பட்டது. அவர் சக ஆசிரியர்களிடம் கலந்து பேசிய பின்பு தேவையான பொருட்கள் வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் மட்டும், பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்து, அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்தது.
அதன்பேரில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், மற்றும் முத்துசாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணன், அகிலா, டெய்சி ராணி, ஜெய் சிங், கண்ணன் ஆகிய 9 பேர் மீது மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.