இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பௌண்டரி மற்றும் 12 சிக்சர் என மொத்தமாக 214 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பௌண்டரி மற்றும் 12 சிக்சர் என மொத்தமாக 214 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக ஜாம்பவான் வீரரான வினோத் காம்ப்ளி மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசியுள்ளனர்.
அதேபோல் இரட்டை சதம் விளாசிய அடுத்த 2 பந்துகளில் சிக்ஸ் அடித்த ஜெய்ஸ்வால், இன்னொரு சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை சமன் செய்துள்ளார்.
1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் 12 சிக்சர்களை விளாசியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த இன்னிங்ஸில் 12 சிக்சர்களை விளாசி வாசிம் அக்ரம் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 22 வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.