தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதால், சுமார் 2 நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார்.
சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக ஒரு அவதூறை தொடங்கினார். சபாநாயகர் தனது தகாத நடத்தையால் தனது நாற்காலியின் கண்ணியத்தையும், சட்டசபையின் மாண்பையும் குறைத்தார்.
சபாநாயகரின் செயலால் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றார். காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.