நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மற்றொரு புனித ஸ்தலத்திற்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. இப்போது உங்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்டமான கல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்திய நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு புதிய பயணம் தொடங்கும் என்றும், கல்கிதான் அதன் போக்கை நிர்ணயிக்கும் என்றும் கூறினார்.
ஜனவரி 22 முதல் ஒரு புதிய காலம் தொடங்கியுள்ளது. பகவான் ஸ்ரீ ராமர் ஆண்டபோது, அவரது செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல், ராம் லல்லாவின் அரியணை மூலம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு ஒரு புதிய பயணம் தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
ராமரைப் போலவே, கல்கியின் அவதாரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கும். கல்கி காலத்தின் சுழற்சியில் மாற்றத்தைத் தொடங்குபவர் என்றும் மோடி தெரிவித்தார்.
தோல்வியில் இருந்து வெற்றியை மீட்டெடுக்கும் தேசம் இந்தியா. பலநூறு ஆண்டுகளாக நாம் தாக்கப்பட்டோம். வேறு எந்த நாடாக இருந்தாலும், வேறு எந்த சமுதாயமாக இருந்தாலும், தொடர்ச்சியான தாக்குதல்களால் அது அழிந்திருக்கும். ஆனாலும் நாம் வலுவாக நிற்கிறோம்.
சிலர் எனக்காக மட்டுமே விட்டுச் சென்ற பல நல்ல பணிகள் உள்ளன. எதிர்காலத்தில் எந்த நல்ல பணி மிச்சமிருந்தாலும், மகான்கள் மற்றும் மக்களின் ஆசியுடன் அதை முடிப்போம்” என்று பிரதமர் தெரிவித்தார்.
இன்று ஒருபுறம் நமது புனித யாத்திரை தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, மறுபுறம் ஹைடெக் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. இன்று கோவில்கள் கட்டப்படும் அதேவேளையில், நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன எனறும் மோடி குறிப்பிட்டார்.
இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாள். எனவே இந்த நாள் இன்னும் புனிதமானதாகவும், ஊக்கமளிக்கும் நாளாகவும் மாறுகிறது. இன்று, நாட்டில் நாம் காணும் கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் நம் அடையாளத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்,
இந்த உத்வேகம் சத்ரபதி சிவாஜி மகாராஜிடமிருந்து மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலடியில் எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.