உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது அமேதி தொகுதியில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தியும் இரானியும் ஒரே நேரத்தில் அமேதி தொகுதியில் வலம் வருகின்றனர். திகர்மாஃபி கிராமத்திற்குச் சென்ற ஸ்மிருதி இரானி, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பிரச்சினைகளை விரைந்து தீர்க்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்ட போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமேதி மக்கள் கோபத்தில் உள்ளது தெளிவாக தெரிந்ததாகவும் அவர் கூறினார். அமேதியில் பலரது ஆதரவைப் பெற்ற வேட்பாளரை எதிர்த்து போராடினேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.