மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ் பெற்ற நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ளது நாகம்மாள் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலுக்கு, கடந்த 12 வருடம் முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனால், மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கோவில் புணரமைப்பு பணி நடைபெற்று வந்தது. அண்மையில் புணரமைப்புப் பணி நிறைவு பெற்றது. இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மூன்று கால யாகப் பூஜைகள் செய்யப்பட்டு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, நாகம்மாள் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். அப்போது, கும்பாபிஷேக புனித நீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.