அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோ காட்சியை காண்பித்து, நோயாளி ஒருவருக்கு டாக்டர் அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், குண்டூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் குண்டூரைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஸ்ரீநிவாச ரெட்டியிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
வயிற்று வலியால் தவித்து வந்த நோயாளி மணிகண்டனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி, மணிகண்டனுக்குக் கடந்த 11-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக வீடியோவை காண்பித்தவாறே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து மருத்துவர் ஸ்ரீநிவாச ரெட்டி கூறுகையில், எனது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவர்களுக்கு விருப்பமான காட்சிகளைக் காண்பித்து அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். அது போலத்தான் மணிகண்டனுக்கும் செய்தோம்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வீடியோவை காண்பித்து அறுவை சிகிச்சை செய்தோம். அவர் தற்போது நலமுடன் உள்ளார். அவர் பூரண நலம் பெற்றவுடன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார்.