தமிழகத்தின் தற்போதைய கடனான ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை அடைக்க 80 ஆண்டுகள் ஆகும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தை திமுக கடன்கார மாநிலமாக மாற்றியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடி கடனில் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடனாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மொத்தம் ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் கோடி கடன் தமிழகத்துக்கு இருக்கிறது. இந்தக் கடனை அடைக்கவே இன்னும் 86 ஆண்டுகள் ஆகும். கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடுகிறது திமுக. திமுக பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி அடையாறு நதியை சுத்தம் செய்ய ஒதுக்கியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். இரண்டு ஆண்டுகளில் ரூ.3,000 கோடிக்கு செலவு செய்ய அடையாற்றில் என்ன இருக்கிறது? ஐந்து ஆண்டுகளில் 3.5 லட்சம் அரசு வேலை வழங்குவோம் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில் இதுவரை 10,600 பேருக்கு மட்டும்தான் அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளில் முன்பு போன்ற சிறந்த தலைவர்கள் இல்லை. தங்களை வளப்படுத்திக் கொள்ள விரும்பும் தலைவர்கள்தான் இருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அடுத்த மூன்று ஆண்டுகளில், திமுகவினருக்கு வருமானம் வருவதற்காக மட்டுமே நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளுக்கடைகளைத் திறப்போம். பனைமரம் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கச் செய்வோம். இதுவரை அரசு வேலை கிடைக்காத குடும்பத்து இளைஞர்களுக்கு, அரசு வேலைகளில் முன்னுரிமை கொடுப்போம். கிராமப்புற மாணவர்களுக்கும் உலகத்தரமான கல்வி கிடைக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நவோதயா பள்ளிகளை “காமராஜர் பள்ளி” என்ற பெயரில் அமைப்போம். நீர் மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவோம்.
காவல்துறையின் உண்மையான நண்பன் பாஜக தான். திமுக காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்துகிறது. காவல்துறையை நாங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்வோம். காவல்துறையினரின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். 8 மணி நேர வேலை நேரம் காவல்துறையினருக்கும் கொண்டு வரப்படும்.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு, 2024 ஆம் ஆண்டு நமது பிரதமர் மோடியின் மூன்றாவது முறை ஆட்சியில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்சியாக அமைவார்கள். 2024 முதல் 2026 வரை பாஜகவின் ஆட்சியைப் பார்த்துவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுங்கள்.
தலைவன், தொண்டன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படும் கட்சி பாஜக மட்டுமே. அற்புதமான சித்தாந்தம் உள்ள கட்சி. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை அரசியல்வாதியான நான் மாநிலத் தலைவராக உயர்ந்துள்ளது
இதற்கு ஒரு உதாரணம். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், என அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று, வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாக தங்கள் அன்பையும், ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகிவிட்டது. ஒவ்வொரு தமிழரும் மோடியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.
பாரதப் பிரதமர் மோடி உலகத் தலைவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். நாட்டின் வளர்ச்சி மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி நடைபெறுகிறது. பிரதமர் அமைச்சரவையில் உள்ள 75 அமைச்சர்களில் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
தமிழகத்திலும், நாடு முழுவதும், ஊழல் இல்லாத, குடும்ப ஆட்சி இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக 400 இடங்களுக்கும் அதிகமாகப் பெற்றுப் பொறுப்பேற்க, தமிழகத்தில் இருந்து 39 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.