இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.
திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த இரண்டு சிங்கத்தில் ஏழு வயதுடைய ஆண் சிங்கத்திற்கு அக்பார் என்று பெயரும், ஆறு வயது பெண் சிங்கத்திற்கு சீதா என்ற பெயரும் சூட்டப்பட்டது.
ஹிந்து தெய்வமாக போற்றப்படும் சீதை என்ற பெயருடைய சிங்கத்துடன் முகலாய பேரரசர்களில் ஒருவரான அக்பர் என்ற பெயருடைய சிங்கத்தை ஒன்றாக வைக்கப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்றும் சீதை என்ற சிங்கத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல” என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் இந்துக் கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்தது.
இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, சீதா என்ற பெயரை அன்பினால் வைத்திருக்கலாம். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். பெயர் வைப்பது என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என்று தெரிவித்தார்.
நீதிபதியின் கருத்துக்கு பதில் சொன்ன விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பு, சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள் என்று விட்டுவிட்டால், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். மனதை புண்படுத்தும் இதுபோன்ற விஷயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் வாதிட்டது.
‘சங்கீர் கோஜோ அஸ்தர் சீதா’ அதாவது கூட்டாளியை தேடி அலையும் அமைதியற்ற சிங்கம் என்ற தலைப்பின் கீழ் உத்தரபங்கா சம்பத் (Uttar Banga Sambad) என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருந்தது.
தற்செயலாகவே சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சீதா, அக்பரை தேடி அலைகிறாள் என்ற பொருள் தரும் கட்டுரை மனதை புண்படுத்துவதாக விஷவ ஹிந்து பரிஷத் சுட்டிக்காட்டியது.
வழக்கு விசாரணையின் இறுதியில், உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி, சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.