கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட மசோதா மேல்சபையில் தோல்வியடைந்தது.
கர்நாடகாவில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வருமானம் வரும் கோயில்கள் அந்த வருமானத்தில் 5 சதவீதத்தையும், ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் வரியாக வழங்க வேண்டும் என்ற வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த சட்டத்திருத்த மசோதா மேலவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேல்-சபையில் எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.
கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் கட்சிக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 35 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர். ஒருவர் சுயேட்சை உறுப்பினர்.
கோவில்களுக்கு வரிவிதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் மேலவையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.